Thursday, March 1, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 7

செவிக்கு உணவில்லாத போது தான் பசிக்கு உணவு என்று சொல்லிக் கொண்டு நாங்கள் நடுகல் நடுகல்களாக தேடித்தேடி சென்று பதிவு செய்து கொண்டிருந்தோம். காலையில் ஆரம்பித்த பணி.. மதியமாகி விட்டது. ஆனாலும் ம்திய உணவுக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் யாருமே யோசிக்கவில்லை. அதிலும் கூடவே திரு. சுகவன முருகன் அவர்கள் தொடர்ந்து பல விஷயங்களைக் காட்டிக் கொண்டும் பேசிக் கொண்டும் வந்ததால் மதிய உணவு என்ற ஒரு விஷயத்தை மறந்து போய்விட்டோம்.

ஆனாலும் எங்களை வழி நடத்திக் கொண்டிருக்கும் இறைவனின் கருணையே கருணை!

ஐகொந்தம் கோயில் எங்கள் பட்டியலில் இருந்தது. அங்கே பக்கத்தில் ஒரு குகையில் இருக்கும் குகைப் பாறை ஓவியங்களைப் பார்க்கச் செல்வது பட்டியலில் இருந்தது. ஆக நேராக ஐகொந்தம் சென்றோம். சரி வைகுந்தம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஐகொந்தம்.. கேள்விப்பட்டதில்லையே. அதோடு ஐகொந்தம் என்ற பெயரே முதலில் எனக்கு மனதில் நிலைக்கவில்லை. ஒருவகையாக இந்தப் பெயரை ஓரிரு முறைச் சொல்லிப் பழகிக் கொண்டு மனதில் நிலைப்படுத்திக் கொண்ட போது ஐகொந்தம் கோயில் வந்து சேர்ந்து விட்டோம்.


கோயிலில் அன்று சிறப்பு வழிபாடு போல.. வைகுந்த ஏகாதசி தினத்திற்கு மறு நாள் அது. பெருமாள் கோயில் வேறு .. சொல்ல வேண்டுமா? கொஞ்சம் மக்கள் நடமாட்டம் இருந்தது. மிகப் புதிதான கோயில். அழகான படிக்கட்டுகள்.. பளிங்குக் கற்கள் கொண்டு செய்யப்பட்ட தரை.. அழகான இயற்கைச் சூழல். ரம்மியமான சுற்றுப் புறக் காட்சி.

பாறைச் சித்திரங்களைப் பார்ப்பதற்கு முன்னர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு செல்வோம் என்று நினைத்துக் கொண்டு சென்றோம்.

இந்தக் கோயிலில் கருவறைக்குள் சென்று நாம் நம் தலையை பெருமாள் பாதங்களில் வைத்து வணங்கிக் கொள்ளலாம். பெரிய நாராயணப் பெருமாள் சிலை. மாலைகளாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கபப்ட்டிருந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் சுவாமி பாதத்தில் தலை வைத்து வேண்டிக் கொண்டு வெளியே வந்தோம். இங்கே புகைப்படம் பிடிக்கவும் தடையில்லை. அதோடு வருவோர் போவோர் கேட்கும் கேள்விகளுக்கும் கோயில் நிர்வாகத்தினரும் குருக்களும் சில தத்துவங்களும் தகவல்களும் சொல்லிக் கொண்டும் இருந்தனர். கோயிலில் இருந்த அந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஏதோ நம் வீட்டுக் கோயில் போன்றதொரு உணர்வு.

வெளியில் வந்தோம். வரிசையாக நான்கு பெண்கள் ஒவ்வொருவரும் தயிர்சாதம் புளியஞ்சாதம், பொங்கல், தேங்காய்சாதம் வைத்துக் கொண்டு பக்தர்களை அழைத்து உபசரித்து ப்ரசாதத்தை வழங்கினர். ப்ரசாதம் மதிய உணவு அளவு. நான்கு வகை சாதம். கேட்க வேண்டுமா. சலிக்காமல் வரிசையில் நின்று நான்கு வகை சாதத்தையும் தயங்காமல் பெற்றுக் கொண்டு அழகான ஒரு இடத்தில் உட்கார்ந்து சுற்றுச் சூழலை ரசித்துக் கொண்டே சுவைத்து சாப்பிட்டோம்.

பெருமாள் அணுக்கிரகம் .. அன்றைய மதிய உணவு விருந்தாகிப் போனது.


ஐகொந்தம் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில்


ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள்


கோயிலின் பின்னால் உள்ள மலைகள்


சுவையான ப்ரசாதம்

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment